நம்மை அறியாமலே அதிசயம்!

அன்றாடம் நாம் சிந்தித்து முடிவு செய்யாமலே பல செயல்களைச் செய்கிறோம். உதாரணமாக, கொதிக்கும் நீரில் கை பட்டால் `படக்’கென்று கையை எடுத்து விடுகிறோம்.

இங்கு, கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்டபிறகுதான் கையை எடுக்கிறோமா? இல்லை. நீரின் வெப்பத்தில் விரல்கள் பட்டவுடனே நரம்புகள் அச்சேதியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன.

அதெல்லாம் சரிதான். ஆனால், வெப்பத்தால் ஏற்பட்ட வேதனையைப் பற்றிய யோசனை நமக்கு ஏற்படுகிறதே என்று கேட்கலாம். அது உண்மைதான். வெப்பத்தால் விரல் நரம்புகளில் இருந்து கிளம்பிய செய்தி, தண்டுவடத்தில் இருந்து தொடர்ந்து பெருமூளைக்குச் செல்கிறது. எனவே, சுட்ட வேதனையைப் பெருமூளை பதிவு செய்கிறது. `சுட்ட இடத்தில் மருந்து போட வேண்டுமா?’ என்று பெருமூளை சிந்திக்கிறது. ஆனால், கையைக் கொதிநீரில் இருந்து எடுத்த செயல் பெருமூளையின் உணர்ச்சிக்குக் காத்திருக்கவில்லை. இவ்வாறு பெருமூளையின் முடிவு இல்லாமலே நிகழும் செயல்களை அனிச்சைச் செயல்கள் (Reflex actions) என்பார்கள்.

தூங்கும்போது கொசு கடிக்கிறது. உடனே கை கொசுவை அடிக்கிறது. அரைகுறை உறக்கத்திலேயே இது நடைபெறுகிறது. உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் நிகழ்கின்றன. இவற்றில் மூளைக்குத் தொடர்பில்லை.

உடலின் அனிச்சைச் செயல்களில் பல, உடலுடன் கூடப் பிறந்தவையாகும். அதாவது அவை இயல்பாக, பயிற்சி இல்லாமல் நிகழ்கின்றன. ஆனால், பயிற்சியின் மூலம் அனிச்சைச் செயல்களை உடல் கற்றுக்கொள்ளும். அதை நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி பாவ்லோவ், அதை சூழல் சார்பான அனிச்சைச் செயல் (Conditioned reflex) என்றார்.

அனிச்சைச் செயல், உடலின் நிலையைப் பொறுத்தது என்பது தெளிவு. களைத்துப்போன தேகத்தில் அனிச்சைச் செயலின் வேகம் குறையும். பெருமூளையின் சிந்தனைகளும் அனிச்சைச் செயல்களைப் பாதிக்கும். அச்சம், கோபம் போன்ற உள்ளக் கிளர்ச்சிகளும் அனிச்சைச் செயல்களைப் பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி இணையம்

Comments

  1. தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

ரஷ்யாவின் துப்பாக்கி மனிதன் (ஏகே 47)

உலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள்