கண்டுபிடிப்பு,1853 இல் கைவிடப்பட்ட பிரித்தானியக் கப்பல்

19ம் நூற்றாண்டில் கைவிடப்பட்ட பிரித்தானிய மீட்புக் கப்பல் ஒன்று கனேடியத் தொல்லியலாளர்களால் ஆர்க்டிக் பெருங் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்.எம்.எஸ். இன்வெஸ்டிகேட்டர் என்ற இக்கப்பல் பாங்க்ஸ் தீவில் உள்ள மேர்சி குடாவில் இவ்வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. 1847 ஆம் ஆண்டில் சேர் ஜோன் பிராங்க்ளின் என்ற நாடுகாண் பயணியும் அவரது மாலுமிகளும் கப்பல்கள் செல்வதற்கான வடமேற்குப் பாதை (Northwest passage) கண்டறியும் நோக்கில் பயணம் செய்த கப்பல் காணாமல் போகவே அதனைத் தேடி இன்வெஸ்டிகேட்டர் என்ற கப்பல் ஆர்க்டிக்கை நோக்கி அனுப்பப்பட்டது. ஆனாலும் 1853 இல் இக்கப்பல் பனிக்கட்டியுள் புதைந்து போகவே அதன அதன் மாலுமிகள் கைவிட வேண்டி வந்தது. அதன் மாலுமிகளை வேறொரு கப்பல் மீட்டு வந்தது. 'இது ஒரு காணக்கிடைக்காத காட்சி' என மேர்சி குடாவில் இருந்து கனேடிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜிம் பிரெண்டிஸ் கூறினார். ராபர்ட் மக்குளூர் என்பவரைக் காப்டனாகக் கொண்ட இன்வெஸ்டிகேட்டர் கப்பல் பிரித்தானியாவில் இருந்து 1848 இல் புறப்பட்டது. பிராங்கிளினின் பயணத்தைக் கண்டுபிடிக்க அக்கப்பல் இரண்டு முறை முயன்றது. கனேடிய ஆர்க்டிக் பகுத...