உயர் இரத்த அழுத்தத்திற்கு அதிக உப்பும் காரணம்

உலகளவில் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, இரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும். நினைவுத் திறனும் குறைந்து சீரான சிந்தனை தடைபடும். இருபது வயதை அடைந்து விட்டாலே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால் ஆண்டுதோறும் ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளத்தின் மீது இதயத்திலிருந்து வெளியேறும் இரத்தம் பாயும் வேகத்தை குறிக்கும். இது இரண்டு வகையிலான அளவில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒன்று இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (சிஸ்டோலிக்) மற்றொன்று இதயத்தின் கீழறைகள் விரியும் போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (டயஸ்டோலிக்). அதாவது 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு. 139/89 என்பது உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முந்தைய நிலை. 140/90 என்ற அளவோ, அதற்கு மேலோ உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்ட நிலையை குறிக்கிறது...