அபாயகரமான காளான்கள்

ஒட்டுண்ணிகள், சாறுண்ணிகள் தவிர, அசைவம் உண்ணும் காளான்களும் உள்ளன. இவை பூஞ்சனம் வகையைச் சேர்ந்தவை. இவற்றின் உடல் அமைப்பு இழை களால் ஆனதாக உள்ளது.

இந்த வகைக் காளான்களில் ஒன்று, கோதுமைப் பயிரைத் தாக்கும் நூற்புழுவை உண்டு உயிர் வாழ்கிறது. அசைவம் உண்ணும் காளான் களில் சிலவகை, ஒரு குறிப்பிட்ட இனப் பிராணிகளை மட்டும் உண்பதற்கு ஏற்ற உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன.

வேறு சில காளான்களோ, புழுக்களைப் பிடிப்பதற்கு ஏற்ற தகுந்த பொறிகளைப் போன்ற வசதிகளைப் பெற்றிருக்கின்றன.

அசைவம் உண்ணும் காளான்களில் `டிரைக்கோ தீசியம் சிஸ்டோபோரியம்’ என்ற வகைக் காளான் மிகவும் மெல்லிய இழையைப் பெற்றுள்ளது. இரையைப் பிடிக்க எந்த ஒரு தனி அமைப்பும் இதில் அமைந்திருக்கவில்லை. ஆனால் இந்த இழைகளில் இருந்து கசியும் ஒருவிதப் பிசுபிசுப்பான திரவம், இதன் அருகே வரும் புழுக்களைப் பிடித்துக்கொள்கிறது.

அப்போது, காளான் வேறு சில மெல்லிய இழைகளைப் புழுவின் உடலினுள் செலுத்தி, அதன் உள்ளே உள்ள அனைத்தையும் உறிஞ்சி ஜீரணித்துக்கொள்கிறது.

சில காளான்கள், விதைகள் போன்ற பிசுபிசுப்பான, உயிருள்ள பொருட்களைப் பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. ஏதாவது சிறு பிராணிகள் அவற்றை உண்டால், அந்த விதைகள் அந்தப் பிராணிகளின் உடலில் முளைக்கத் தொடங்குகின்றன.

அந்தச் செடி போன்ற அமைப்பு பல இழைகளைத் தோற்றுவித்து, பிராணியின் உடலைக் கிழித்து உண்டு விடுகிறது.

இவ்வாறு இந்தக் காளான்கள் பயங்கர இயல்பு கொண்டவையாக இருந்தாலும், சில நன்மைகளும் விளைகின்றன. இவற்றில் சில, பயிர்களைத் தாக்கும் பூச்சியினங்களை அழிக்கும் இயல்பைக் கொண்டிருப்பதால் விவசாயிகளுக்கு நன்மை புரிகின்றன.

Comments

Popular posts from this blog

தாவர உலகின் பிசாசு

நன்னம்பிக்கை முனை cape of good hope

நம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்